அன்புடன் அந்தரங்கம்! 30-12-2012 (Anbudan Antharangam)



அன்புள்ள அம்மாவுக்கு —
நான் 25 வயது நிரம்பிய இளைஞன். இளநிலை பொறியியல், 2008ல், முடித்து, நான்கு ஆண்டுகள் சரியான பணிவாய்ப்பு கிடைக்காமல், தற்போது முதுநிலை பொறியியல் படிப்பு படித்து வருகிறேன். எனக்கு உள்ள பிரச்னை, உடல் ரீதியிலானதா அல்லது மனரீதியானதா என்று புரியவில்லை. நான், அரசினர் பொறியியல் கல்லூரியில், எந்திர பொறியியல் படித்தேன். படிக்கும் காலத்தில், விடுதியில் யாரிடமும் சகஜமாக பழக மாட்டேன். அதிகமாக தனிமையில் இருப்பேன். படிப்பிலும், அந்த அளவுக்கு நாட்டம் செல்லவில்லை. பிறருடன் பழகுவதற்கு அதிகமாக கூச்சப்படுவேன். பிற்காலத்தில், இந்த பழக்கமே எனக்கு எமனாக மாறியது. சகமாணவர்கள் வளாக நேர்காணலில் தேர்வாகி, பணி நியமனம் பெற்ற பின்பும், என்னால், ஒரு நிறுவனத்தில் கூட தேர்வாக இயலவில்லை. காரணம், கூச்சம் மற்றும் பயம்.
எனக்கு இப்போது, 25 வயது நிரம்பியிருந்தாலும், அந்த அடிப்படை சுபாவம் இன்றும் மாறவில்லை. என் உடல் மிகவும் மெலிந்து, 18 வயது பையனை போல் காட்சியளிக்கிறேன். எடை 50 கிலோ. உயரம் சராசரியாக உள்ளது. மூன்று வேளையும் திருப்தியாக சாப்பிட்டாலும், உடல் எடை கூடவில்லை. என் வயதை ஒத்த நபர்கள், இருசக்கர வாகனத்தில் சீறி கொண்டு செல்கின்றனர். எனக்கு, இருசக்கர வாகனத்தை ஓட்டவே பயமாக இருக்கிறது. இதற்காகவே, நான் மொபைட் வாங்கி வைத்திருக்கிறேன். அதிலும், 30 கி.மீ., வேகத்திற்கு மேல் செல்ல மாட்டேன். அதற்கு மேல் வேகமாக செல்லலாம் என்று முயற்சித்தால், என் உடல் கட்டுப்பாட்டை இழந்து விடுகிறேன். எனக்கு ஏற்படும் பயத்தை பற்றி, ஆன்மிக பெரியோரிடம் கேட்டபோது, "படைத்த இறைவன் மேல் பயம் ஏற்படுத்திக் கொள். உ<லக பொதுமக்களிடம் உள்ள பயம் போய்விடும்...' என்று அறிவுரை கூறினர். அதன் பின், நான் முடிந்தவரை இறைவன் மேல் பயத்தை ஏற்படுத்தி கொள்கிறேன். ஒரு நாளைக்கு, ஐந்து வேளை இறைவனை வழிபட்டாலும், என்னால் நூறு சதவீதம் முழுமையாக கவனம் செலுத்த இயலவில்லை. மனது, பல விஷயங்களை பற்றி சிந்தனை செய்கிறது; குழப்பி கொள்கிறேன்.
என்னிடம் அதிகமாக பெண்மை தன்மை காணப்படுவதாக, என்னிடம், வெளிப்படையாக பேசும் சிலர் கூறுகின்றனர். சிறிய விஷயத்தில் கூட முடிவு எடுப்பதில் மிகவும் தடுமாறுகிறேன். அமைதியாக, ஒரு இடத்தில் உட்கார்ந்து தியானம் செய்யும் போது கூட, என் இதயம் துடிப்பதை உணர முடிகிறது. ஒரு காரியத்தை, தனியாக செய்யும் போது சிறப்பாக செய்யும் நான், மற்றவர்கள் பார்க்கும் போது தடுமாறி விடுகிறேன். இதயம் வேகமாக துடிப்பது போல் உணர்கிறேன்.
ஆனால், நான், இரண்டு வருடம் ஆசிரியர் பணியில் இருந்த போது, என்னுடைய மாணவர்கள், சக ஆசிரியர்கள், முதல்வர் உட்பட அனைவரும், என்மேல் மிகுந்த மரியாதை வைத்திருந்தனர். ஆசிரியர் பணியில் எனக்கு ஏற்பட்ட பணி திருப்தியின் காரணமாகத்தான், இதே துறையில், என்னை மெருகேற்றி கொள்ள முதுகலை பொறியியலை வேறொரு அரசினர் பொறியியல் கல்லூரியில் படிக்கிறேன். எனக்குள்ள பயம், தாழ்வு மனப்பான்மை போன்ற குணங்களில் இருந்து முழுமையாக மீண்டு, நம்பிக்கையுள்ள இளைஞனாக, வாலிபனாக தந்தையாக வர முயற்சிக்கிறேன். இதற்காக, தங்களின் ஆலோசனையை ஆர்வமாக எதிர்பார்க்கிறேன்.
— இப்படிக்கு,
உங்கள் மகன்.
அன்புள்ள மகனுக்கு —
உன் கடிதம் கிடைத்தது. விவரம் அறிந்தேன்.
ஏற்கனவே, பயத்துடன், தாழ்வு மனப்பான்மையுடன் சிறு பையன் போன்ற திரேகத்துடன் கூச்ச சுபாவத்துடன் கூடிய உன்னை, மிதமிஞ்சிய இறையச்சம் மேலும், பலவீனன் ஆக்கிவிட்டது. மறுமை பற்றிய கனவில், இம்மையை கோட்டை விடுகிறாய். நியாயமான வெற்றிகள், நியாயமான சந்தோஷங்கள் இம்மைக்கு அவசியம் தேவை. இருபத்தியைந்து வயதிலும், நீ பதினெட்டு வயது உடலமைப்பை பெற்றிருப்பதற்கு, மரபியல் காரணம் இருக்கலாம். உன் பாட்டனார், உன் தந்தையின் உடல்வாகு உனக்கு அமைந்திருக்கும்.
உன்னிடம் அதிகம் பெண்மைத்தன்மை காணப்படுகிறது என கூறியிருக்கிறாய். நான்கைந்து சகோதரிகளுடன் பிறந்து, வளர்ந்த கடைக்குட்டி தம்பியாய் நீ இருக்கக் கூடும். ஒரு காரியத்தை தனியாக செய்யும் போது, சிறப்பாக செய்யும் நீ, மற்றவர்கள் பார்க்கும் போது, சொதப்பி விடுகிறாய். நாம் செய்யும் காரியம், தவறாய் போய், பிறர் இழித்து, பழித்து பேசிவிடுவரோ என, தேவையில்லாமல் பயப்படுகிறாய்.
சிறிய விஷயத்தில் கூட, முடிவெடுக்க திணறுகிறாய். சரியான முடிவுகள் எடுப்பது, தலைமைப் பண்புக்குரியது. அந்த தலைமைப் பண்பு உன்னிடம் மிஸ்சிங். உனக்குள்ள பயம் விலக, தாழ்வுமனப்பான்மை நீங்க, தன்னம்பிக்கை இளைஞனாய் விஸ்வரூபிக்க அடுத்தடுத்து, நீ என்னன்ன செய்ய வேண்டும் தெரியுமா?
ஆண்மை ததும்பும் விதமாய், உன் ஆடை அணிதலும், மேனரிசங்களும் மாற்றியமைக்கப்பட வேண்டும். முகத்தில் மிடுக்கையும், கம்பீரத்தையும் பேரரசனுக்குரிய வீரத்தையும் குழைத்துப் பூசிக் கொள். வெளிப்படையாக எல்லாரிடமும் பேசி பழகு. எந்த காரியம் செய்தாலும், முழு முனைப்போடும், அர்ப்பணிப்போடும் செய். பிறரின் அபிப்பிராயங்களை பற்றி கவலைப்படாதே. இறைவனின் மீது பாரத்தை போட்டு, எந்த விஷயத்திலும், முடிவெடுக்க பழகு. பத்து முடிவில் எட்டு முடிவுகள் சரியாக இருந்தால், போதுமானது.
இரண்டு ஆண்டுகள் ஆசிரியராக பணிபுரிந்து இருக்கிறாய்; மாணவர்களும், சக ஆசிரியர்களும் உன் மீது மரியாதை வைத்திருக்கின்றனர். அதனால், உனக்கு பணி திருப்தியும் கிடைத்திருக்கிறது. எல்லாரிடமும் வெளிப்படையாக பேசிப் பழகும் குணத்தை பெற்றாய் என்றால், உன் ஆசிரியத் தொழில், இன்னும் சிறக்கும். உன் முதுகலை பொறியியல் பட்டப்படிப்பை ஆரவாரமாய் முடிப்பாய்.
இருசக்கர வாகனத்தில், அசுரவேகத்தில் செல்வது விவேகமல்ல. 30 கி.மீ., வேகம் பாதுகாப்பானது. தாறுமாறாய் ஓட்டி தான், உன் ஆண்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏதுமில்லை.
அறவே பய உணர்வு இல்லாமல் இருப்பதும் நல்லதல்ல. அஞ்சுவதற்கு அஞ்சுதல் தேவை என்கிறது திருக்குறள். நீ சிறந்த ஆசிரியனாக எதிர்காலத்தில் திகழப் போவதும், இறைவனுக்கு செய்யும் சிறப்பான தொண்டுதான். இறைபக்தி, இடைவிடாத கடின உழைப்பு, எல்லைமீறாத தன்னம்பிக்கை, துணிச்சல், நேர்மை இவற்றை, உரிய விகிதத்தில் கலந்தால், இம்மையிலும், மறுமையிலும் வெற்றிதான்.
— என்றென்றும் தாய்மையுடன்
சகுந்தலா கோபிநாத்.

Labels:



comment closed

Blogger இயக்குவது.