அன்புடன் அந்தரங்கம்! 20-01-2013(Anbudan Antharangam)



அன்புள்ள அம்மாவிற்கு — 
நான், 28 வயது பெண். என்னுடையது காதல் திருமணம். ஒரு பெண் குழந்தை உண்டு. என் கணவர் முற்போக்கு சிந்தனையுள்ளவர். என் கணவர் பணிபுரியும் அலுவலகத்தில் அவருக்கு ஒரு பெண் நண்பி உண்டு. அவளுக்கு திருமணமாகி ஒரு குழந்தை உண்டு. கணவர் துபாயில் பணிபுரிகிறார். அவள் தன் தம்பியுடன் தனியே வீடு எடுத்து தங்கியுள்ளாள். நட்பு முறையில் அவள் எங்கள் வீட்டிற்கு வருவாள்; நாங்களும் அவள் வீட்டிற்கு செல்வோம்.
நான் ஒரு மாதம் என் ஊரில் தங்கியிருந்தேன். அப்போது அவள் ஒரு நாள் என் வீட்டிற்கு வந்து இரவு தங்கியுள்ளாள். அதை, என் கணவரும், என்னிடம் கூறினார். நான் திரும்பி வந்ததும் அக்கம் பக்கம் இருப்பவர்கள் என்னை திட்டினர். நான் அவரிடம் அதை கேட்டபோது, "நான் நாலு பேருக்காக என்னை மாத்திக்க முடியாது. நான் நானாகத்தான் இருப்பேன்... இதில் என்ன தவறு?' என்று கூறினார். நானும் பிரச்னை செய்ய வேண்டாம் என இருந்து விட்டேன்.
நான் ஊரில் இல்லாதபோது அவள்தான் அவருக்கு உணவு செய்து வருவாள். நான் இதுவரை எதுபற்றியும் அவளிடம் கேட்டதில்லை. எங்களிருவருக்குமிடையே ஏதாவது பிரச்னை வந்தால், எனக்கு சப்போர்ட் செய்து பேசுவாள். ஆனால், என்னால் நட்பு அடிப்படையில் அதை எடுத்துக் கொள்ள முடியவில்லை. காரணம், நான் ஹவுஸ்-வைப். என் சிந்தனை எப்போதும் என் கணவரைப் பற்றிதான். 
முன்பெல்லாம் எங்கு போனாலும் சொல்லிவிட்டு செல்வார்; இப்போது, நிலைமை தலைகீழ். அவர் எங்கு சென்றிருக்கிறார் என்பதை அந்த பெண்ணிடம் கேட்டுத் தெரிந்து கொள் கிறேன். அவள் முன் என்னை மட்டம் தட்டிப் பேசுவார். எனக்கு கஷ்டமாக இருக்கிறது. என்னதான் நட்பாக இருந்தாலும், அது கலாசாரத்தை மீறியதாக இருக்கக் கூடாது எனத் தோன்றுகிறது.
நான் இதுபற்றி கேட்டால், "இஷ்டமிருந்தால் இரு... இல்லாவிட்டால் போய்விடு. என் இஷ்டப்படித்தான் நான் இருப்பேன்...' என்று கூறுகிறார். தாங்கள் தான் எனக்கு நல்ல ஆலோசனை தர வேண்டும். மேலும், மாதர் சங்கம், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் இல்லம் ஆகியவற்றின் முகவரி, போன் நம்பர்கள் எனக்கு தரவும்.
— அன்பு மகள்.
அன்பு மகளுக்கு —
உன் கடிதம் கண்டேன்.
தும்பை விட்டு விட்டு, வாலைப் பிடிக்க முயற்சி செய்கிறாய். என்ன தான் அவள், உன் கணவரின் அலுவலகத்தில் பணிபுரிகிறார் என்றாலும், ஆண்- பெண் நட்பு ஆரோக்கியமானதுதான் என்றாலும், அதற்கும் ஒரு எல்லை இருக்கிறது கண்ணம்மா...
உன் கணவர், "நட்பு' என்ற பெயரில் செய்வது பச்சைத் துரோகம். "நாலுபேருக்காகத் தன்னை மாற்றிக் கொள்ள முடியாது... நான், நானாகத்தான் இருப்பேன்...' என்பவரிடம் - "அதே போல, நானும் என் இஷ்டப்படி இருக்கட்டுமா?'— என்று கேள்!
உன்னிடமும் தவறு இருக்கிறது. நீ ஊருக்குப் போயிருக்கும் போது, அவள் எதற்காக உன் கணவருக்கு சமைத்து எடுத்து வர வேண்டும்? ஊரில் ஓட்டலா இல்லை? அட, அப்படியே ஓட்டல் சாப்பாடு ஒத்துக் கொள்ளாது என்றால், அறிந்தவர்கள் - சொந்தக்காரர்களிடம் சொல்ல வேண்டியது தானே! இல்லாவிட்டால், ஒரு குக்கர் வைத்துக் கொள்ள உன் கணவருக்குச் சொல்லிக் கொடுத்து, பொடி, புளிக்காய்ச்சல் இப்படி எதையாவது செய்து வைத்து விட்டுப் போக வேண்டியதுதானே!
"நான் ஊரில் இல்லாதபோது அவள்தான் அவருக்கு உணவு கொண்டு வருவாள்; நான் இதுவரை எது பற்றியும் அவளிடம் கேட்டதில்லை...' என்று எழுதியிருக்கிறாயே...
ஏன்... அவளிடம் பயமா, தாட்சண்யமா அல்லது இப்படிக் கேட்பது அநாகரிகம் என்று நினைக்கிறாயா?
இதோ பார்... எதில் நாம் தாட்சண்யம், நாகரிகம் பார்க்க வேண்டும் என்று ஒரு வரைமுறை இருக்கிறது. அதேபோல, எதற்குப் பயப்பட வேண்டும் என்றும் இருக்கிறது... அநாவசியத்துக்குப் பயப்பட்டால், ஏமாளிப் பட்டம் கட்டிக் கொள்ள வேண்டியதுதான்!
அந்த பெண்ணை தனியே அழைத்துப் பேசு: 
"நீ இப்படி என் கணவருடன் நட்பு என்கிற பெயரில் அத்துமீறிப் பழகிக் கொண்டிருக்கிறாயே... அதே போல, உன் கணவரிடம் எவளாவது பழகினால் சகித்துக் கொள்வாயா?' என்று கேள்...
"தன் மனைவி மிகவும் நம்பிக்கைக்குரியவள்' என்று நம்பி, உன் கணவர் துபாயில் உழைத்துக் கொண்டிருக்கிறாரே... அவருக்கு இந்த விஷயம் தெரிய வந்தால் எப்படி இருக்கும்?' என்று கேள்.
இப்படிக் கேட்பதால், உன் கணவருக்கும், அவளுக்கும் இடையில் இருக்கும் அந்தப் புனிதமான நட்பின் தன்மையை நீ புரிந்து கொள்ளவில்லை என அவர்கள் நினைத்தால் நினைக்கட்டும்!
அதே சமயத்தில், ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழைய முடியாது என்பதையும் புரிந்து கொள். உன் கணவர் சபலிஸ்ட் என்பது தெரிந்திருந்தும், நீ அடிக்கடி அவரைப் பிரிந்து ஊருக்குப் போவது நல்லதல்ல. தவறுகள் நடப்பதற்கு சந்தர்ப்பங்களை நாமே ஏற்படுத்திக் கொடுத்து விட்டு, அப்புறம் "அய்யோ அப்பா' என்று அலறுவதில் பிரயோஜனமே இல்லை.
"அவள் எதிரில் என்னை மட்டம் தட்டிப் பேசாதீர்கள்!' என்று ஒரு முறை சொல். அதை உன் கணவர் கேட்கவில்லை என்றால், மறுமுறை அவர் அப்படிப் பேசும்போது - நேரே அந்தப் பெண்ணின் முகத்தைப் பார்த்து இப்படிச் சொல்...
"இது எங்கள் குடும்ப விஷயம். நடுவில் நீ இருப்பது எனக்குப் பிடிக்கவில்லை... வெளியே போ!'
இதற்கு உன் கணவர் ஆட்சேபனை தெரிவித்தால் - போர்க்கொடியை உயர்த்து. என்றைக்கும் உன் இடத்தை விட்டுக் கொடுக்காதே. குடும்பத்துக்குள் கலகத்தை உண்டு பண்ணுகிறவர்களை கலாசாரம், பண்பாடு என்று பார்த்துக் கொண்டு வீட்டுக்குள் அனுமதிக்காதே. முடிந்தால் அவள் வீட்டில் இது பற்றிச் சொல்வேன் என்று சொல்.
"உன்னை வீட்டை விட்டுப் போ' — என்று உன் கணவர் விரட்டினால், "நான் ஏன் போக வேண்டும்!' என்று எதிர்த்துக் கேள். அதையெல்லாம் விட்டு, கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் இல்லம், மாதர் சங்கம் என்று எடுத்த எடுப்பில் அழுது கொண்டு கிளம்பாதே; அது கையாலாகாத்தனம்... புரிகிறதா?
அந்த வீட்டை விட்டு, உன் கணவரை விட்டு நீ பிரிய வேண்டாம். வேண்டுமானால் அவர் கோர்ட்டுக்குப் போகட்டும். தற்சமயம் நீ எந்தக் காகிதத்திலும் கையெழுத்துப் போட்டுத் தர வேண்டாம். நிமிர்ந்து நில். அழாதே... அது பலவீனம்! எதிர்த்து போரிடு. வெற்றி நிச்சயம் உண்டுதான்! 
— என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்.

Labels:



comment closed

Blogger இயக்குவது.