அன்புடன் அந்தரங்கம்! 28-04-2013

அன்பு சகோதரிக்கு—
தற்சமயம், ஓய்வு பெற்ற அரசு அலுவலர் நான். அலுவல் நிமித்தம் அடிக்கடி வெளியூர் செல்வேன்.
வேலையில் இருக்கும்போது ஓய்வே கிடையாது எனலாம். ஒரு நாளைக்கு, குறைந்தது பத்து மணி நேரமாவது வீட்டிற்கு வெளியே செலவிட வேண்டியிருக்கும்.
விடுமுறை நாட்களிலும் ஓய்வு கிடையாது. வேலையின் தன்மை அப்படி. எனக்கு எந்த கெட்ட பழக்கமும் கிடையாது; எல்லாரும் பாராட்டும்படி அமைதியாக வாழ்ந்து கொண்டிருந்தது என் குடும்பம்.
பள்ளிப்பருவம் எட்டாத சிறுகுழந்தைகள்; அழகான மனைவி. அமைதியான என் மனதில் சிறு சிறு சலனங்கள் ஏற்படும்படி சில நிகழ்வுகள்...
யாராவது வீட்டிற்கு வந்தால், எனக்குத் தெரியாத கோணத்தில் நின்று, அவர்களை நோட்டம் விடுவாள் என் மனைவி. நாள் செல்லச் செல்ல, நான் இல்லாத நேரத்திலும், சிலர் ஏதாவது காரணம் காட்டி வீட்டிற்கு வருவது வாடிக்கையாகி விட்டது.
அக்கம் பக்கத்தில் உள்ள ஆண்கள் அவர்களது வீட்டின் முன்னாலோ, தெருவிலோ நின்றால், அவர்களை விழுங்கி விடுவது போல் பார்ப்பாள். நாங்கள் வெளியே ஒன்றாக எங்காவது புறப்பட்டால், பின்தங்கி, போவோர் வருவோரை நோட்டம் விடுவாள்.
அவளது சேஷ்டைகளை எப்போதாவது சுட்டிக்காட்டி திருத்திக்கொள்ளச் சொன்னால், கத்தி ஆர்ப்பாட்டம் செய்வாள். குழந்தைகளை நினைத்து, நான் மவுனம் சாதிக்கத் தொடங்கினேன். மனதைத் திடப்படுத்த முயன்றேன். ஆனால், முடியவில்லை.
முதன்முதலில் நான் ஸ்பரிசித்த பெண் என்பதாலோ என்னவோ அவள் எது செய்தாலும், அவளிடம் வெறுப்புணர்ச்சி தோன்றுவதில்லை எனக்கு. ஆனால், நாட்கள் செல்லச் செல்ல என் மனவேதனை கூடிக் கொண்டே போகிறது.
பல வருடங்களாக நடந்த பல நிகழ்வுகள் நினைத்துப் பார்க்க அருவருப்பாக இருந்தாலும், கோர்வையாக வந்து மனத்திரையில் தோன்ற ஆரம்பித்தால், பைத்தியம் பிடித்து விடும்போல் உணர்கிறேன்.
தன் அக்காவின் பேச்சை கேட்டு தன் உள்ளாடைகளிள் தன்மையை மாற்றிக் கொண்டாள்; என் பேச்சிற்கு மதிப்பு கிடைக்கவில்லை.
எப்போதாவது கோவிலுக்குப் போனால் சுற்றிவரும் போது பின் தங்கி, பக்கத்து வீட்டு வாலிபன் சாமி கும்பிடும் அழகை ரசித்துக் கொண்டிருப்பாள்!
என் வெளியூர் பயணம், திரும்பும் தேதி முதலியன என் மனைவிக்கு மட்டும் தெரியப்படுத்துவதுண்டு; ஆனால், அந்த விபரங்கள் சிலரது மத்தியில் பேசப்படுவதை எதிர்பாராதவிதமாக கேட்டு அதிர்ச்சியுற்றிருக்கிறேன் நான்.
சமையற்கட்டில் இருக்கும் ஒரு பொருளைப் பற்றி ஒருவர், வாய் தவறி என்னிடம் கூற நேர்ந்ததை என்னால் மறக்க முடியவில்லை.
உடல்நலம் குன்றி மருத்துவரிடம் அழைத்துப் போயிருக்கிறேன் பலதடவை. "உங்களுக்கு இந்த மாதிரி நோயின் அறிகுறிகள் இருக்கா? ஏனென்றால் இது ஆண் - பெண் தொடர்பினால் ஏற்படும் நோய்...' என்று மருத்துவர் என்னைக் கேட்டதும் ஆடிப்போனேன்.
எதிலும் பிடிப்பில்லாமலும், யாருடனும் மனம் விட்டுப் பழகவோ, மனம் விட்டுச் சிரிக்கவோ முடியாதவனாக, மனதுக்குள் அழுதுகொண்டே காலம் தள்ளுகிறேன்.
ஒரு பக்கம் அளவு கடந்த பாசம்; இன்னொரு பக்கம் அவளது வக்கிரபுத்தியும், செயல்களும் ஏற்படுத்தும் வேதனை — இவைகளுக்கு மத்தியில் தூக்கமின்மையும், மன உளைச்சலும் ஏற்பட்டு, மன நோயாளியின் நிலைமையை நெருங்கி வரும் துர்ப்பாக்கியவனாக, உணருகிறேன் நான்.
எவ்வளவோ நிகழ்ச்சிகள் இன்னும் அடுக்கிக் கொண்டே போகலாம். ஏதோ சில நிகழ்வுகளை மட்டும் கொட்டி விட்டேன். ஆறுதலளிக்கும் அறிவுரையை தங்களிடம் எதிர்பார்த்து ஏங்குகிறேன்.
— அன்பு சகோதரன்.

அன்பு சகோதரருக்கு —
உங்களது கடிதம் கண்டேன். வேதனையைப் பேனாவின் மூலம் இறக்கி வைத்திருக்கிறீர்கள்.
உங்களுடைய கடிதத்தில் அந்த வரிகள் மாத்திரம் இல்லாமல் இருந்திருந்தால் - "அநாவசியமாய், சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் மனசைப் போட்டு அலட்டிக் கொள்ளாதீர்கள்...' என்றுதான் நானும் எழுதியிருப்பேன்.
"பல முறை உடல்நலம் குன்றி மருத்துவரிடம் அழைத்துப் போயிருக்கிறேன்... "உங்களுக்கு இந்த மாதிரி நோயின் அறிகுறிகள் இருக்கா... ஏனென்றால், இது ஆண் பெண் தொடர்பினால் ஏற்படும் நோய்' என்று மருத்துவர் என்னைக் கேட்டதும் ஆடிப் போனேன்... மவுனமாய் இருந்து விட்டேன்...'
இந்த வரிகள் - உங்கள் மனைவி குணத்தை முழுமையாகவே விவரித்து விட்டது...
அவளுக்கு, தான் மிகவும் அழகாக இருக்கிறோம் என்ற எண்ணம் இருக்க வேண்டும் அல்லது அளவு கடந்த வேட்கை இருக்க வேண்டும்.
இப்போது அவளுக்கு என்ன வயது? ஏன் கேட்கிறேனென்றால், அழகும், இளமையும் நிரந்தரமில்லாதது. மனம் எத்தனைக்கெத்தனை தூய்மையாக இருக்கிறதோ - அந்த அளவுக்கு முகமும், அழகும், இளமையும் நீடித்திருக்கும்.
இருக்கிறபோது பேயாட்டம் ஆடினால் - இல்லாத போது - நோயும், நொடியும் வருவதோடு அல்லாமல், பாயும் படுக்கையுமாய் அல்லல் பட வேண்டியிருக்கும்.
ஆனால், சகோதரரே... இதையெல்லாம் நீங்கள் சொல்லி அவள் கேட்கப் போவதில்லை.
இப்போது நீங்கள் ரிட்டையராகி, வீட்டோடு தானே இருக்கிறீர்கள். போனது போகட்டும். இனியாவது, இவளுக்கு நாம் என்ன குறை வைத்தோம், எதனால் இவள், திசை கெட்டுப் போனாள் என்பதை - உங்களுக்கு நீங்களே அலசிப் பாருங்கள்.
வேலையில் இருந்தபோது, அடிக்கடி, வெளியூர் போனதினால் இந்த பிரச்னை ஏற்பட்டதா? இல்லை, அவளுக்கு முழுமையான தாம்பத்தியத்தின் அர்த்தம் புரியவில்லையா?
ஆணோ - பெண்ணோ, மனம் விட்டுப் பேசுவதும், சிரிப்பதும், சின்னச் சின்ன விஷயங்களைப் பரிமாறிக் கொள்வதும், வேலைகளைப் பங்கு போட்டுச் செய்வதும், ஒருத்தருக்காக மற்றவர் விட்டுக் கொடுப்பதுடன், சில கணங்களில் எதுவுமே பேசாமல் - கண் மூடி, கை கோர்த்து உட்கார்த்திருப்பதும், மனைவியின் ஈரக்கூந்தலைப் பிரித்துத் துவட்டுவதும், கணவரின் மீசையில் வரிசைத் தப்பி வளர்ந்திருக்கும் ஒற்றை நரையை சீர் செய்வதும்...
இதெல்லாம் முழுமையான தாம்பத்திய சுகத்துக்குப் பக்க வாத்தியங்கள்; பக்க வாத்தியங்கள் இல்லாத கச்சேரி களை கட்டுமா... யோசியுங்கள்...
இப்போதும் ஒன்றும் மோசமில்லை. ஒரு சிலரைப் போல, இப்படிப்பட்ட மனைவி மீது ஆத்திரமோ, அருவெறுப்போ அடையாமல், "இன்னமும் அவளை நேசிக்கிறேன்' என்று சொல்கிறீர்களே... இப்படிப்பட்ட கணவர் கிடைக்க அவள்தான் பூர்வ ஜென்மத்தில் நிறைய புண்ணியம் செய்திருக்க வேண்டும்.
இனி நீங்கள் செய்ய வேண்டியது...
1. முதலில் நல்ல மருத்துவரிடம் உங்களது உடல் நிலையைப் பரிசோதித்துக் கொள்ளுங்கள். அவள் பார்வையில் படுகிற மாதிரி, முறையற்ற உடலுறவினால் உண்டாகும் வியாதிகள், எய்ட்ஸ் பயங்கரம் போன்ற புத்தகங்களைப் போட்டு வையுங்கள்.
2. பழைய சம்பவங்களையே நினைத்து நினைத்துப் புழுங்குவதை விட்டு, புதுசாய் சில இனிய சம்பவங்களை உண்டாக்கிக் கொள்ளுங்கள்... மனைவிக்குப் பிடித்த பொழுதுபோக்கு எதுவோ, அதை நீங்களே திடீரெனச் செய்யலாம்! சினிமாவுக்கு அழைத்துப் போதல், அவளது உறவினர் வீட்டுக்கு அழைத்துப் போதல், அவ்வப்பொழுது வாய் திறந்து அவளது சமையலையோ அல்லது உடை உடுத்தும் விதத்தையோ பாராட்டலாம்.
தனிமை கிடைக்கும் போது, செல்லமாய் அவளை அழைத்து, "என்னடா... சமையற்கட்டுலயே இன்னும் என்ன செய்யறே...' என்று கேட்டோ... "நீ உட்காரேன். நான் உனக்கு சாப்பாடு பரிமாறறேன்...' என்றோ கொஞ்சம் நெருங்கி (ஜாக்கிரதை... அவள் நோய் சரியாகும்வரை ரொம்பவும் நெருங்க வேண்டாம்) விசாரிக்கலாம்.
3. சமயம் கிடைக்கும் போதெல்லாம் புண்ணிய ஸ்தலங்களுக்கு அழைத்துப் போகலாம்.
4.உங்களுக்கு ஆழ்ந்த கடவுள் பக்தி இருக்கலாம். பழைய கலாச்சாரம், சம்பிரதாயங்களில் நாட்டம் இருக்கலாம். அதையே உங்கள் மனைவியும் விரும்ப வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள்.
5.கூடுமானவரை, உங்களுக்குப் பொருத்தமான, பிடித்த பொழுதுபோக்கைத் தேர்ந்தெடுத்து ஒதுங்கி இருங்கள்.
உற்சாகமும், சோர்வும் உள்ளத்திலிருந்துதான் பிறக்கிறது... எப்போதும் மனசை ஆரோக்கியமாய் வைத்து, உங்கள் வரையிலாவது அமைதியோடு இருக்க முயற்சியுங்கள்.
என் வாழ்த்துகள்.
என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்.

Labels:



comment closed

Blogger இயக்குவது.