எனக்கு திருமணமாகி ஒன்பது ஆண்டுகள் ஆகின்றன. எனக்கு ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் உள்ளது.
நான்
திருமணமாவதற்கு முன், பி.எஸ்.சி., பட்டப் படிப்பு முடித்திருந்தேன். என்
கணவரின் முயற்சியால், பி.எட்., பட்டம் பெற்று, ஒரு ஆசிரியை பணிக்கு
தகுதி பெற்றிருக்கிறேன்.
என் கணவர் எம்.எஸ்.சி., பி.எட்., படித்து,
ஒரு தனியார் பள்ளியில் சொற்ப சம்பளத்திற்கு பணியாற்றி வருகிறார்.
அத்துடன் பைனான்சும் செய்து வந்தார். கெட்ட பழக்கம் ஏதும் இல்லை.
என்னிடம்
என் மாமியார் நடந்து கொள்ளும் விதம் எனக்கு பிடிக்கவில்லை. அதாவது,
என்னை மதிப்பதில்லை. இதனால், என் கணவருக்கும், எனக்கும் அடிக்கடி சண்டை
வரும்.
என் கணவர், அம்மா பிரியர் அல்ல வெறியர். அதனால், நான் எது
சொன்னாலும் காதில் வாங்கிக் கொள்ள மாட்டார். இத்தருணத்தில், நாம் தனியாக
குடித்தனம் போக வேண்டும் என்று, எவ்வளவு முறை கெஞ்சியும், கேட்டும்
அதற்கு அவர் செவிசாய்க்க வில்லை.
விடுமுறைக்கு என்னை கொண்டு வந்து
தாயார் வீட்டில் விட்டுச் சென்றார். நான் இதைப் பயன்படுத்தி, "தனிவீடு
பார்த்தால்தான் வருவேன்...' என்று பிடிவாதமாக இருக்கிறேன். இவ்வாறு
ஒன்றரை ஆண்டுகள் கழிந்தன. என் பிள்ளையை எங்கள் ஊர் பள்ளியிலேயே சேர்த்து
படிக்க வைக்கிறேன். நாங்கள் பிரிந்துதான் இருக்கிறோம்.
இதற்கிடையில்
என்னை அழைக்க வந்தபோது, என் தந்தைக்கும், அவருக்கும் வாக்குவாதம்
ஏற்பட்டு, அவரை திட்டி அனுப்பி விட்டார். அதிலிருந்து குழந்தைகளைப் பற்றி
விசாரிப்பதும் இல்லை. என்னைப் பற்றி கவலைப்படுவதும் இல்லை.
தற்போது, பைனான்சில் பெரு நஷ்டம் ஏற்பட்டு, சொந்த வீட்டையே விற்று விட்டதாகவும், குடியும், குடித்தனமுமாக
இருப்பதாகவும் கேள்விப்பட்டேன்.
இதற்கிடையில் இன்னொரு திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் செவிவழிச் செய்தியாக உள்ளது.
அவர் மேல் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. என் தாயாரோ, "அவர் தனியாக
போனால்தான் உன்னை அனுப்புவேன்...' என்று பிடிவாதமாக இருக்கிறார்.
எங்கள்
உறவினர்களோ, எங்கள் பிரிவினைப் பற்றி கவலைப்படவில்லை. எந்த கெட்ட
பழக்கங்களும் இல்லாத என் கணவர், பல கெட்ட பழக்கங்களுக்கு ஆளாவதற்கு நான்
காரணமாக இருந்து விட்டேனோ என எண்ணத் தோன்றுகிறது.
என் கணவர் கஷ்டப்படும்
போது அருகில் இருந்து ஆறுதல் கூற முடியவில்லையே என்று ஒரு பக்கம் மனம்
ஏங்குகிறது. இருந்தாலும், என் தாயார் ஒரே பிடிவாதமாக உள்ளார்.
இந்நிலையில் நான் எடுத்திருக்கும் முடிவு சரிதானா? தனித்து வாழ முடியுமா?
உங்கள் மகளுக்கு இந்த நேரத்தில் தாங்கள் கூறும் அறிவுரை யாது?
— இப்படிக்கு,
பாசமுள்ள மகள்.
அன்பு மகளுக்கு,
உன்
கடிதம் பார்த்தேன். என்ன பெண்ணம்மா நீ... மாமியாரை பிடிக்கவில்லை என்று
புருஷனையே விட்டு விட்டு வருவாயா? மாமியார் கொடுமைக்காரியாகவே
இருக்கட்டும். நீ ஒன்றும் படிக்காத கட்டுப்பெட்டி பெண் இல்லையே! நீயும்
ஆசிரியர் பயிற்சி பெற்று, பட்டமும் வாங்கியிருக்கிறாய். கல்லூரியிலும் சரி,
இப்போது தனித்து நின்று ஏதாவது ஒரு பள்ளியில் ஆசிரியை வேலைக்குப்
போனாலும் சரி, இது போன்ற சொந்தம் இல்லாத மாமனார்-மாமியார்கள் (உனக்கு
மேல் உள்ளவர்கள்) எத்தனை பேரை சந்தித்திருப்பாய்... சந்திக்கப்
போகிறாய்... படிப்பின் காரணமாகவும், உத்தியோகத்தின் நிமித்தமாகவும்,
இதெல்லாம் சகித்துக் கொண்டும், அனுசரித்தும் போவாய் தானே...
எத்தனை
ஆசிரியைகள், தலைமை ஆசிரியரிடம் சுமூகமாகப் பழகுகின்றனர்? எலியும் -
பூனையுமாக ஒரு பக்கம் இருந்தாலும், அதற்காக வேலையை விட்டு விட்டா வந்து
விடுகின்றனர். அப்படி விட்டு விட்டு வந்தால், மாதம் பிறந்தவுடன்
மளிகைக்கும், வீட்டு வாடகைக்கும், பாலுக்கும், குழந்தைகளின்
படிப்புக்கும் எங்கே, யாரிடம் போய் நிற்பர்?
ஆக, இந்த ஒரு
அல்பகாரணத்திற்காகவே, எத்தனையோ சிடுமூஞ்சி மேல் அதிகாரிகளை, பெண்கள்
சகித்துக் கொண்டும், சமயங்களில் தங்கள் சீற்றத்தை வெளிப்படுத்தியும்,
கோபத்தைக் காட்ட, குறைந்த பட்சம் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டாவது வளைய
வளைய வருகின்றனரே தவிர, வேலையை உதறுகின்றனரா?
அப்படியிருக்க,
எத்தனையோ விதமான குழந்தைகளின் மனப்போக்கு தெரிந்து, கண்டிக்க வேண்டிய
இடத்தில் கண்டித்து, அன்புடன் தட்டிக்கொடுக்க வேண்டிய இடத்தில் தட்டிக்
கொடுத்து, குழந்தைகளின் பெற்றோர் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் பொறுமையாய்
பதில் அளித்து, கூட வேலை செய்யும் சக ஆசிரியைகளிடம் எல்லாம் நட்புடன்
பழகி, "சிறந்த ஆசிரியை' என்ற பட்டத்தை வாங்க வேண்டிய நீ, மாமியார் என்கிற
முரட்டு தலைமை ஆசிரியையையும், கணவன் என்கிற அசட்டுக் குழந்தையையும்
அப்படியே விட்டுவிட்டு விலகி வந்தது தப்பும்மா.
யோசித்துப்பார்... ஒரு
தாயாரால், தன் மகனுக்கு வயிறு பார்த்து சாப்பாடு போட முடியும். தலைவலி,
காய்ச்சல் என்றால், வேளா வேளைக்கு மருந்து கொடுக்க முடியும். அவன்
வியாபாரத்தில் நஷ்டம் அடைந்து வந்தால், "எதற்காகடா இந்த வம்பு... வேண்டாம்
விட்டுவிடு...' என்று சொல்ல தான் முடியும்.
அதே போல, வேறு பெண்
தொடர்பு, தகாத சகவாசம் ஏற்பட்டால், "ஓ' வென உட்கார்ந்து அழத்தான்
செய்வாள். ஒரு மனைவி தான் இதுபோன்ற சமயங்களில் நயமாகவும், அதட்டியும்
சொல்லி, அவனை வழிக்கு கொண்டு வர முடியும்.
உன் அம்மாவுக்கு தன் மகள்
கஷ்டப்படுகிறாளே என்ற பரிவு இருக்கலாம்... ஆனால், அந்தப் பரிவே, மகளின்
எதிர்காலத்துக்கு ஒரு சிறையாகி விடக்கூடாது பார்... செடிகள் வளர தண்ணீர்
அவசியம் தான். அதே சமயம், நிறையத் தண்ணீர் விட்டால் செடி என்ன ஆகும்?
அழுகிப் போய் விடாதா?
செடிக்கு சூரிய வெளிச்சமும் தேவை. தண்ணீரை ஊற்றி நிழலில் வைத்தால் செடி பூக்குமா, காய்க்குமா?
உன்
வரையில், உன் மாமியார் தான் உனக்கு சூரிய வெளிச்சம். நீ, உன்
கொடுமைக்கார மாமியாருடன் எதிர்த்து நில். நான் வேண்டாம் என்று சொல்ல
மாட்டேன். நாலு தடவை மாமியாரின் குரலுக்கு அடங்கிப் போ. ஐந்தாவது முறை
நானும் மனுஷி தான் என்பதை, உன் வார்த்தைகளில் காட்டு. இது ஒரு விதமான
போராட்டம்.
உன் தாயாருடன் எத்தனை தரம் சண்டை போட்டிருக்கிறாய்? அது
போல, தாராளமாய் சண்டை போடு. இன்னொரு பக்கம் மாமியாருக்குச் செய்ய வேண்டிய
கடமைகளையும் மறவாமல் செய். இன்றில்லாவிட்டாலும், என்றாவது ஒரு நாள்
நிலைமை சரியாகும். அதை விட்டு, ஏரி மேல் கோபித்துக் கொண்டு குளிக்காமல்
போனால் ஏரிக்கு நஷ்டமா, அந்த முட்டாளுக்கு நஷ்டமா?
உன் அம்மா, அப்பா
காலத்துக்குப் பிறகும் நீ வாழ வேண்டும். ஆதலால், புடவைத் தலைப்பை இழுத்து
செருகிக் கொண்டு, குழந்தையையும் இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டு, உடனே
புருஷன் வீட்டை நோக்கி வீறு நடை போடு. வாழ்த்துகள்.
— என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்.
comment closed