அன்புள்ள அக்காவுக்கு,
உங்கள்
உடன்பிறவா சகோதரி எழுதிக்கொள்வது. எனக்கு 37 வயதாகிறது. இரண்டு
குழந்தைகள். என் கணவர் நன்கு படித்தவர். வெள்ளை மனசு. யாரையும் எளிதில்
நம்பி விடுவார். கல்யாணமாகி இருபது வருடம் ஆகிறது. பெற்றோர் பார்த்து பேசி
முடித்த கல்யாணம். கடந்த சில வருடங்களாக எனக்கும், என் கணவருக்கும் சண்டை
வருகிறது. என் கணவருக்கு மாதத்தில் இருபது நாட்கள் வெளியூரில் வேலை.
பத்து நாட்கள் தான் என்னுடன், என் குழந்தைகளுடன் இருப்பார். "வேலையென்று
வெளியூர் செல்ல வேண்டாம்... எனக்கும், என் குழந்தைகளுக்கும் தனியாக
இருக்க கஷ்டமாக இருக்கிறது; உள்ளூரில் இருந்து வேலை பாருங்கள்' என்றால்
அவர் கேட்பதே இல்லை. இதனால், சண்டை வருகிறது.
என் கணவர், வெளியூரில் இருக்கும் தன் நெருங்கிய நண்பர் ஒருவரை, வீட்டிற்கு விருந்துக்கு அழைத்து வந்தார். நண்பர் கல்யாணம் ஆனவர். அவருக்கு நான்கு குழந்தைகள். அவர் என் குழந்தைகளிடமும், என்னிடமும், என் கணவரிடமும் அன்பாக நடந்து கொண்டார். அவரை எங்கள் எல்லாருக்கும் பிடித்து விட்டது. நண்பரின் மனைவி குழந்தைகளை, நான், என் கணவர், குழந்தைகள் போய் பார்த்து வந்தோம். நண்பர் குடும்பத்தாரும், என் குடும்பத்தாரும் நன்றாக பழகினோம்; கடந்த பத்து வருடமாக நண்பர் எங்கள் குடும்பத்தில் ஒருவராகி விட்டார்; என் கணவர் என்னைப் பார்க்க வரும்போது, அவரும் வந்து போவார். இந்நிலையில், நான் மட்டும் தனியாக நண்பரின் வீட்டுக்கு போய் அவர் குடும்பத்தாரை பார்க்க போனேன். அங்கு நண்பர் மட்டும் இருந்தார். அவர், "மனைவி, குழந்தைகள் வெளியூர் சென்று விட்டனர்...' என்று சொன்னவுடன், நான் ஊருக்கு கிளம்பலாம் என்று எழுந்தேன். அந்த நண்பர் என்னிடம் தப்பாக நடந்து கொள்ள முற்பட்டார். நான் மிகவும் பயந்து, "இதெல்லாம் தப்பு' என்று சொல்லியும் அவர் கேட்கவில்லை; எவ்வளவோ போராடியும் என்னால் அவரிடம் இருந்து, என் பெண்மையை காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை. நான் இப்படி ஆகிவிட்டேன்; எனக்கே தலை சுற்றுகிறது; இப்போது எல்லாரிடமும் கோபம் வருகிறது; எரிந்து விழுகிறேன். பைத்தியம் பிடித்தவள் போல ஆகிவிட்டேன்; என் நிம்மதி போய் விட்டது; ஒரு பெண்ணுக்கு கற்புதானே உயிர். அது பறிபோய் விட்ட நிலையில், உயிர் வாழ வேண்டுமா? வேலை செய்யும் போதும், தூங்கும் போதும் நான் செய்த தப்பு என்னை முள்ளாய் குத்துகிறது. வெளியில் யாரிடமும் சொல்ல முடியவில்லை. ஒவ்வொரு நிமிடமும் செத்து செத்து வாழ்வதை விட, சாவதே மேல் எனத் தோன்றுகிறது. அந்த நண்பர் இப்போது, என் குழந்தைகள், என்னுடன் எல்லாம் பேசுவது இல்லை. அன்பு, பாசம் எல்லாம் பொய் தானா! யாரையும் நம்ப கூடாதா? இவ்வளவு நாள் பழகியதெல்லாம் உண்மையில்லையா? என் மனம் படும் வேதனையை யாரிடமும் சொல்லி அழ முடியவில்லை. நான் வாழ்வதா, சாவதா என்று நீங்கள் தான் சொல்ல வேண்டும். — உங்கள் அன்பு, உடன் பிறவா சகோதரி. அன்பு சகோதரிக்கு... உன் கடிதம் கிடைத்தது. படித்து மிகவும் மனம் வருந்தினேன். உன் கணவர் நிறைய படித்தவர். வெள்ளை மனசு, யாரையும் எளிதில் நம்பி விடுவார் என்று எழுதியிருக்கிறாய்... அப்படி நம்பி, தன் நண்பனை வீட்டுக்கு அழைத்து வந்து விருந்து வைத்ததின் பயன், அந்த நண்பன் உண்ட வீட்டுக்கே இரண்டகம் நினைத்து விட்டான். ஆனாலும், சகோதரி, உத்தியோக நிமித்தமாய் வெளியூர் போகிறவர்களுக்கு அங்கங்கே பலர் உதவுவதும், அப்படி உதவுவதாலேயே நண்பர்களாகுவதும் சகஜம்தான். உன் கணவர் அவர்கள் வீட்டில் போய் சாப்பிட்டு தங்கியிருந்தது போல, அவரையும் தன் வீட்டிற்கு விருந்துக்கு அழைத்து வந்திருக்கலாம். இந்த நட்பு, காலப் போக்கில் இறுகியும் இருக்கலாம். ஆனால், கண்ணம்மா... என்ன தான் உன் கணவரின் உயிர் நண்பன் என்றாலும், நீ, அந்த ஊருக்கு போயிருந்தபோது, உன் கணவரோ அல்லது வேறு துணையோ இல்லாமல் தனியாக அவன் வீட்டிற்கு போனது தவறு. இதற்காகத் தான் இந்த நாளில் முன் கூட்டியே போன் செய்தோ, கடிதம் எழுதியோ, நாம் வரும் நேரத்தில், அவர்கள் குடும்பம் வீட்டில் இருக்கிறதா, வந்தால் பேச, தங்க வசதிப்படுமா என்பதை எல்லாம் அறிந்து, பிறகே போக வேண்டும் என்ற ஒரு வழக்கத்தை கடைபிடிக்கின்றனர். ஆனாலும், உனக்கு வெள்ளை மனசுதான். இதையெல்லாம் எதிர்பார்த்தா நீ போயிருப்பாய்? நாலு பிள்ளை பெற்று, பத்து வருடங்களாக சினேகம் பாராட்டி, கடைசியில் நண்பரின் மனைவியையே... அவன் மறுபடியும் உன் வீட்டிற்கு வருவதாகவும், உன்னிடமோ, உன் குழந்தைகளிடமோ முகம் கொடுத்து பேசுவது இல்லை என்றும், இதுதான் நட்புக்கு லட்சணமா, அன்பு, பாசம் எல்லாம் பொய்தானா என்று கேட்டு எழுதியிருக்கிறாய். இவ்வளவு நடந்து முடிந்த பிறகும், எப்படி நீ அவன், உன்னிடம் முன்பு போல் பேசுவது இல்லை என ஆதங்கப்படுகிறாய். எனக்குப் புரியவில்லை. அவனுக்கு உன்னையோ, உன் குழந்தைகளையோ பார்க்க, முகம் எங்கே இருக்கிறது? அவன் வருவதே கூட, நீ எந்த அளவில் இதுபற்றி உன் கணவரிடம் சொல்லியிருக்கிறாய் என்பதை தெரிந்து கொள்வதற்காகவும் இருக்கும் அல்லவா? இந்த இடத்தில், நான் ஒன்று சொன்னால், நீ கொஞ்சம் மனசை திடப்படுத்தி, இந்த அக்கா சொல்வதிலும் நியாயம் இருக்கிறது என்று ஏற்றுக் கொள்ள வேண்டும். "ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழைய முடியாது' என்கிற பழமொழி உனக்குத் தெரியுமல்லவா? ஏதோ அவன்தான் பலாத்காரம் செய்தான் என்றால், நீ பயந்து போய் இதெல்லாம் தப்பு என்று அவனுக்கு உபதேசம் செய்து கொண்டிருக்க வேண்டியதில்லை. கொஞ்சம் மன உறுதி இருந்திருந்தால், கத்தியோ, கூச்சல் போட்டோ, வாசலுக்கு ஓடி வந்தோ உன்னைக் காப்பாற்றிக் கொண்டிருக்கலாம். ஆனாலும், இப்படிப்பட்ட அயோக்கியர்கள், தங்கள் பக்கத்து தவறை அப்படியே மூடி மறைத்து, உன் பெண்மையைப் பற்றித்தான் குறை கூறுவர். உன் கணவரும் அப்பாவியாக இருப்பதால், உன்னிடம் வந்து தன் ஆத்திரத்தை, எரிச்சலைக் காட்டுவார். ஆதலால், நடந்தது நடந்து விட்டது. உனக்கு இதை நினைத்து நினைத்து ஆத்திரமும், அவமானமும், துக்கமும் ஏற்படுகிறது என்றால் அது நியாயமான விஷயம் தான். இப்படியொரு உணர்வு உனக்கு இருப்பதே பாராட்டுக்குரியது. மனசில் உள்ள அந்தரங்கங்களை, ஆத்திரங்களை, அவலங்களை, அப்படியே சேமித்து வைக்காதே! பின்னாளில் நீ, ஒரு மனநோயாளியாகி விடுவாய். உன் குழந்தைகளுக்காக நீ வாழ வேண்டும்; உன்னுடைய வாழ்க்கையில் இந்தக் கறுப்பு நாள், ரப்பரால் அழிக்கப்பட வேண்டும் என்றால் ஒரு காரியம் செய். மனசில் இருப்பதை எல்லாம் ஒரு நோட்டு புத்தகத்தில் வார்த்தைகளாக கொட்டு! அவன் மீதுள்ள ஆத்திரம், அவனை எப்படியெல்லாம் பழிவாங்க நினைக்கிறாயோ அத்தனையும் கொட்டு... இதை மற்றவர்கள் பார்க்காமல் — (முக்கியமாக உன் கணவர்...) எரித்து சாம்பலாக்கு. அத்தோடு தலைமுழுகி விடு. உன் மனம் லேசாவதை உணர்வாய். இப்பொழுது உன் மனம் குப்பைக் கூடையாக இருக்காது. பூக்கடையாக மாறிவிடும். — என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத். |
Labels: News
comment closed