Anbudan Antharangam in Tamil (அன்புடன் அந்தரங்கம்! ) - 05-03-2013


அன்புள்ள அம்மாவுக்கு —
நான், "டிகிரி' படித்தவள். எனக்கு திருமணம் முடிந்த முதல் மாதத்திலேயே பிரச்னை துவங்கியது. இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். என் கணவர் ஒரு அம்மா பைத்தியம். எனக்கு என்ன வாங்கி கொடுத்தாலும், நான் என்ன சொன்னாலும், அதை அப்படியே அம்மாவிடம் போய் சொல்லி விடுவார்.
இது தவிர, "செக்ஸ்' விஷயத்திலும் அவர் சரியில்லை. நான் வலிய போனாலும் ஈடுபாடு காட்ட மாட்டார். நானே, அவரிடம் நெருங்கினால் என்னை ஒதுக்கி தள்ளுவார். அந்த நேரம், கையை வெட்டிக் கொள்வேன்... சூடு போட்டுக் கொள்வேன்...
இவ்வாறு என்னை கட்டுப்படுத்தி, அழுது தூங்குவேன்.
ஆக, எங்களுக்குள் சின்ன பிரச்னை கூட தீராமல், இழுத்துக்கொண்டே போகும். விஷம் குடித்து காப்பாற்றப்பட்டேன். இரண்டு மூன்று முறை இதே போல சாகத் துணிந்தேன்.
மேலும், இவர் குடிகாரர். என் வீட்டில் சொல்லி, "எனக்கு விவாகரத்து வாங்கி தாருங்கள்' என்றால், "ஒரு பெண்ணால் தனியாக வாழ முடியாது. அது குடும்பத்திற்கு அழகு அல்ல... மாப்பிள்ளை வேண்டாம் என்றால் பிள்ளைகளுக்காக அந்த வீட்டிலே விதவையாக வாழு...' என்கின்றனர்.
என் கணவரும் நல்லவர் தான். யார் சொன்னாலும் கேட்பார். சுயபுத்தி கிடையாது. "அம்மா அம்மா' என்றுதான் புலம்புவார். நான் ஒரு நாள் அவரைப் பார்த்து, "நீங்க ஒரு மனோதத்துவ டாக்டரைப் பாருங்கள். ஒரு பெண்ணைப் புரிந்து கொள்ள முடியவில்லையே... நான் வேண்டாம் என்றால் என் வாழ்க்கையை ஏன் கெடுத்து விட்டீர்கள்?' என்றெல்லாம் கேட்டேன்.
"மூன்று வேளை நன்றாக சாப்பிடு... நன்றாக துணி உடுத்து. வீட்டோடு இரு. என்னிடம் வேறு எதுவும் எதிர்பார்க்காதே. என் விஷயத்திலும் தலையிடாதே...' என்கிறார் என் கணவர்.
எங்களுக்கு கொஞ்சம் கடன் உள்ளது. கடன் தீர்ந்த பிறகு என்னிடம் நன்றாக இருப்பாராம். மனிதர் என்றால் நிச்சயம் கடன் இருக்கும்; கஷ்டம் இருக்கும். இவர் மனம் சந்தோஷமாக இருந்தால்தான் என் கூட வருவாராம். இப்ப மூன்று மாதமாக, எங்கள் வீட்டில் நாங்கள் இருவரும் தனித்தனியே வாழ்கிறோம். அவர் வருகிறார், சாப்பிடுகிறார், போகிறார். எனக்கு மனம் ரொம்ப வேதனைப்படுகிறது. என்னை கண்டாலே அவருக்கு அப்படி ஒரு வெறுப்பு. சம்பளம் இல்லா வேலைக்காரி போல் நடத்துகிறார். எனக்கு எப்படியாவது ஒரு நல்ல வழி கூறி எழுதுங்கள்.
— இப்படிக்கு,
அன்பு சகோதரி.

அன்பு சகோதரி,
உன் கடிதம் கண்டேன். சொன்னால் கோபிக்க மாட்டாயே... அனுபவ அறிவே இல்லாத, பத்து வயது சிறுமி போல் எழுதியிருக்கிறாய்... உன் மனக்கஷ்டங்கள் எல்லாம் புரிகிறது. ஆனால், இத்தனை கஷ்டமும் யாரால், எதனால் என்று கொஞ்சமாவது யோசித்து பார்த்திருக்கிறாயா நீ?
கணவர் ஒரு அம்மா பைத்தியம் என்று எழுதியிருக்கிறாயே கண்ணம்மா... உன் அம்மாவிடம் உனக்குப் பாசமில்லையா, ஆசையில்லையா, அம்மாவை நினைத்தாலே கண்கள் கலங்கி, குளமாகி விடவில்லையா?
ஆணுக்கும் அது போன்ற உணர்ச்சிகள் எல்லாம் உண்டும்மா... அதுவும் திருமணமான புதிதில், பெண்ணை விடவும், ஆணுக்கு பொறுப்பு இரண்டு மடங்கு. இந்த பக்கம் புதுசாய் வந்தவளின் மனம் கோணாமலும் நடந்து கொள்ள வேண்டும்; அந்த பக்கம் அம்மாவின் கண்களில் ஈரம் படராமலும் கவனித்துக் கொள்ள வேண்டும்.
இது போன்ற சமயங்களில் யார் விட்டுக் கொடுக்கின்றனரோ - அவர்கள் பக்கம் அந்த ஆணின் மனம் மிகச் சுலபமாக சேர்ந்து விடும். இன்னொன்றும் சொல்வேன்; தப்பாக எடுத்துக் கொள்ளக் கூடாது. "செக்ஸ்' என்பது - தாம்பத்யத்துக்கு மிக அவசியமான ஒன்று தான். ஒப்புக் கொள்கிறேன். ஆனால், வெறும், "செக்ஸ்' மட் டுமே தாம்பத்யமாகி விடாது.
இந்த நுண்மையான உணர்வு, முள் செடியில் இருந்து ரோஜாவைப் பறிப்பது போல - அத்தனை மென்மையாக இருக்க வேண்டிய ஒன்று சகோதரி! முள் இல்லாத இடம் பார்த்து விரல் வைக்க வேண்டும். அழுத்திப் பறித்தால் ரோஜா இதழ் உதிரும். அவசரப்பட்டால் முள் கிழிக்கும். புரிகிறதா?
கணவனுக்கு என்ன பிடிக்கும்... காபியில் டிகாஷன் தூக்கலா - தோசை முறுகலா - சட்னியா - சாம்பாரா என்பதில் ஆரம்பித்து - அவருக்கு மிகவும் பிடித்த நபர் யார் அம்மாவா... அவர்களிடம் நாமும் அன்பு காட்டிப் பேசினோமா... அவர்களுடன் உட்கார்ந்து சாப்பிட்டோமா... மருந்து எடுத்துத் தந்தோமா... கோவில், குளம் என்று அழைத்துப் போனோமா?
— இது எதுவுமே செய்யா விட்டாலும், "உங்கம்மா பாவம்... அவங்களுக்கும் நம்மை விட்டா வேற யார் இருக்காங்க' - என்று ஒரு வார்த்தை... இதெல்லாம் நீ, உன் கணவன் மீது உனக்கு இருக்கும் அக்கறையைக் காட்டுகிற வார்த்தைகள்; செயல்கள்.
இதை ஆதாரமாய் வைத்துதான் உன்னுடைய இல்லறம் தீர்மானிக்கப்படுகிறது.
"உன் அம்மா வேண்டாம்... உன் உறவினர் வேண்டாம்... ஆனால், நீ மட்டும் நான் விரும்பியபடி எல்லாம் நடக்க வேண்டும்' என்றால் கொஞ்சம் சர்வாதிகாரத்தனமாய் தோன்றவில்லையா?
அடுத்தது - தம்பதியருக்குள் மலரும் நட்பு! தூய்மையான களங்கமில்லாத நட்பு. அப்படிப்பட்ட சினேகம் இருந்தால்தான், வேலை முடிந்ததும் வீட்டுக்கு ஓடி வரத் தோன்றும் கணவனுக்கு... அவன் வரும்போது சந்தோஷமாய் எதிர்கொள்ளத் தோன்றும் மனைவிக்கு.
சினேகம் இருக்கிற இடத்தில், நான் ஒசத்தி - நீ மட்டம் என்கிற பேதமெல்லாம் கிடையாது... இரண்டு நல்ல நண்பர்களுக்கு, இரவெல்லாம் விழித்துப் பேச எத்தனையோ கதைகள் இருக்கும்.
கடைசியாக - உனக்கு, உன் கணவனிடத்திலும், அவருக்கு உன்னிடத்திலும் கருணை - பரிவு இதெல்லாம் இருக்க வேண்டும்.
இப்படிப்பட்ட அக்கறையுடன், கருணையும், பரிவும் உள்ள துணையிடத்தில், தானாகவே எதிராளிக்கு நம்பிக்கை உண்டாகும். இந்த நம்பிக்கையே அவனை, சகலத்தையும் அவளிடத்தில் ஒப்படைக்கச் செய்து, அவளது அரவணைப்புக்குள் கட்டுண்டு கிடக்க வைக்கும்...
சகோதரி, குடிபோதையில் கூட அவர், "அம்மா, அம்மா' என்று புலம்பி அழுகிறார் என்றால் - அந்த அவருடைய அம்மாவிடத்தில் - அவர்கள் நல்லவரோ, பொல்லாதவரோ - நீயும் அன்புடன் நடந்து கொள்ள வேண்டாமா?
மனோதத்துவ டாக்டரிடம் முதலில் நீ கலந்து பேச வேண்டிய நிலையில் இருக்கிறாய்... கோபத்தின் உச்சத்தில் கையை பிளேடால் கிழித்துக் கொள்வது, தற்கொலை முயற்சியில் இறங்குவது - இதெல்லாம், மற்றவர்களின் கவனம் நம் மீது திரும்ப வேண்டும் என்பதற்காக, மன ஊனமுற்றவர்கள் எடுத்துக் கொள்ளும் விபரீத முயற்சி...
உன் அன்பும், பரிவும் இருந்தாலே, உன் கணவரின் குடிப்பழக்கத்தை மாற்றி விடலாம். இந்த விஷயத்தில் நீ, உன் மாமியாருடன் சேர்ந்து இருந்தாலே போதும்... கண்டிப்பாய் மாமியாரின் உதவி உனக்கு கிடைக்கும். வாழ்க்கையை, மணமுள்ள மலர் தோட்டமாக மாற்றும் சக்தி உன்னிடத்தில்தான் உள்ளது. குழந்தைகள் பாவம்... உங்களுடைய பிரச்னையில் அவர்களுக்கு ஏன் தண்டனை?
புலம்பலை நிறுத்து... கணவருக்குள் இருக்கும் காதலையும், பிரியத்தையும் வெளிக் கொண்டு வர வேண்டுமானால், அவரின் இதயத்துக்குள் எப்படி நுழைவது என்று யோசி. அதை விட்டு அசுர முயற்சிகளில் இறங்காதே!
— என்றென்றும் தாய்மையுடன்
சகுந்தலா கோபிநாத்.

Labels:



comment closed

Blogger இயக்குவது.