அன்புடன் அந்தரங்கம்! 02-06-2013

 

அன்புள்ள அம்மாவுக்கு—
நான் 18 வயது மாணவி. பட்டப்படிப்பு முதல் வருடம் படிக்கிறேன். கல்லூரியில் அனைவரிடமும் சகஜமாக பழகுவேன். காதல் என்றாலே பிடிக்காது. அதுவும் திருமணத்திற்கு முன் வரும் காதல் நிலைக்காது; திருமணத்திற்கு பின் வரும் காதல் உண்மையானது; நிலைக்க கூடியது என்ற கருத்துடையவள்.
என்னிடம் சக மாணவன் ஒருவன் நன்றாக பேசி பழகுகிறான். எனக்கு அவனை மிகவும் பிடிக்கும் நண்பனாக. அவன் என் வீட்டிற்கு வந்துள்ளான்; நானும் அவன் வீட்டிற்கு பலமுறை சென்றுள்ளேன். எங்கள் இருவர் கருத்தும் ஒரே மாதிரி இருக்கும்.
ஆனால், சில நேரம் அவன் பேசுவதை கேட்கும்போது, ஒருவேளை அவன் என்னை காதலிக்கிறானோ என எண்ணத் தோன்றும். என்னிடம் ஒரு முறை, "நான் நான்கு பேரை மட்டும் என் வாழ்நாள் முழுவதும் வேண்டும் என்று நினைக்கிறேன் அதில் நீயும் ஒன்று...' என்று கூறினான்.
அவன் நண்பனாக என்னிடம் கூறினானா அல்லது நான் சந்தேகப்படும்படி ஏதாவது அவன் மனதில் உள்ளதா என்று தெரியவில்லை.
எனக்கு சீனியர் ஒருவர் படிக்கிறார். அவரிடம் சீனியர் என்ற முறையில் பேசியதுண்டு. மற்றபடி ஒன்றுமில்லை. ஒருநாள் என்னை அழைத்து அவரை பற்றிய அனைத்து விவரங்களையும் கூறினார். அவர் என்னை காதலிப்பதாக கூறி, என் பதிலையும் கேட்டார். எனக்கு அவர் கூறியது உண்மையா, "ராகிங்' செய்கிறாரா என்று புரியவில்லை. நான் எதுவும் கூறாமல் திரும்பி விட்டேன்.
இரண்டு நாள் கழித்து மீண்டும் கேட்டார். "எனக்கு அவ்வாறான எண்ணம் எதுவும் இல்லை...' என்று கூறினேன்.
ஆனால், "சீரியஸாக சொல்கிறேன். நீ என்னை காதலிக்கிறேன் என்று மட்டும் சொல். பிறகு உன்னை தொந்தரவு செய்ய மாட்டேன். எனக்கு இந்த வருடத்தோடு கல்லூரி வாழ்க்கை முடிந்து விட்டது. நானும் ஒரு நல்ல நிலையில் வந்து, அதன் பின் உன்னை திருமணம் செய்து, பின் காதலிக்கலாம். ஆனால், அதுவரை நீ காத்திருக்க வேண்டும்.
இதற்கு இடையில், நான் உன்னை எப்போதாவது வந்து பார்த்து கொள்கிறேன். நீயும் நன்றாக படி. கண்டிப்பாக இருவரது பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ளலாம்' என்று கூறினார்.
எனக்கு தெரிந்த வரையில் ஆசிரியர்கள் மத்தியிலும், மாணவர்கள் மத்தியிலும் அவருக்கு நல்ல பெயர். அவர் ஒரு மாதம் ஊருக்கு செல்வதால் என்னிடம் பதிலை கேட்டார்.
ஆனால், எனக்கு இரண்டு பேரையும் பிடிக்கும். முன்னவன் என்னிடம் காதலிப்பதாக கூறவில்லை. நான் நினைத்ததை போல் அவன் கூறினால், அவனுக்கு என்ன பதில் சொல்வது? எனக்கு ஒன்றுமே தோன்றவில்லை. நீங்கள் இதற்கு ஒரு முடிவு கூற வேண்டும்.
குறிப்பு : நான் வேறு மாநிலத்தை சேர்ந்த, இந்து பெண். என் பெற்றோர் ஏற்பரா? பதில் கூறவும்.
இப்படிக்கு,
அன்பு மாணவி.


அன்பு மகளுக்கு—
உன் கடிதம் கிடைத்தது. அநாவசியத்துக்கு இப்போதிலிருந்தே ஏன் காதலைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறாய்?
உனக்கோ 18 வயதுதான் ஆகிறது. கல்லூரியில் முதல் வருடம்தான் படித்துக் கொண்டிருக்கிறாய். இன்னும் படிக்க, சாதிக்க என்று எவ்வளவோ விஷயங்கள் காத்துக் கொண்டிருக் கின்றன.
"எனக்கு காதல் பிடிக்காது... பிடிக்காது, என்று சொல்லிக் கொண்டே — அதைப்பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறாய் நீ...
உன் நண்பன், "என் வாழ்நாளில் நான்கு பேரை மட்டும் மறக்கவே முடியாது; அதில் நீயும் ஒருத்தி' என்று கூறினால், உடனே, நீ சந்தேகப்படும்படி அவன் மனசில் காதல், கத்திரிக்காய் ஏதாவது இருக்கிறதா என்று எதற்காக கற்பனை செய்து கொள்கிறாய்?
அவன் யதார்த்தமாக இதைச் சொல்லியிருக்கலாம் அல்லது உன்னை தன் நல்ல சிநேகிதியாக, உற்ற தோழியாக - நினைத்துச் சொல்லியிருக் கலாம்.
எவனாவது இப்படிச் சொன்னால், அசட்டுத்தனமாக கண்டதை நினைத்துக் கொள்ளாதே! அவன் பேச்சுவாக்கில் சொல்லி விட்டுப் போய் விட்டான். நீயாகக் குழப்பிக் கொள்கிறாய் உன் மனசை.
இப்போது சொல் — அவன், உன்னைக் காதலிக்க வேண்டும் என்று நீ எதிர்பார்க்கிறாய் இல்லையா? அவன் அப்படி உன்னைக் காதலிக்கவில்லை என்றால் நீதான் வருத்தப்படுவாய்; உன்னை நீயே வருத்திக் கொள்வாய்!
சரி இரண்டாவதாக அந்த சீனியர்... "இந்த வருடத்தோடு என் கல்லூரி வாழ்க்கை முடிந்து விட்டது, நானும் நல்ல நிலையில் வந்து, அதன் பின் உன்னை...' என்று கூறி, ஊருக்குச் சென்றுள்ளதாக எழுதியிருக்கிறாய்...
பட்டப்படிப்பு முடிந்து விட்டதா? இளங்கலையா அல்லது முதுகலைப் பட்டப்படிப்பா? ஏன் கேட்கிறேன் என்றால், வெறும் இளங்கலையோடு பட்டப்படிப்பு முடிந்து விட்டதாக அந்த சீனியர் கருதலாம். அவன் வரையில் பட்டப்படிப்பை முடிப்பதே பெரிய விஷயமாக இருக்கலாம்.
நீ நன்றாகப் படிக்கக் கூடியவளாக இருந்தால், முதுகலை முடித்து, பெரிய படிப்பு வரையில் போகலாம்.
அப்படியொரு வாய்ப்பு எதிர்காலத்தில் உனக்கு கிடைக்கும் பட்சத்தில், அதை நீ ஏற்றுக் கொள்வது தான் புத்திசாலித்தனம். அந்த சீனியர் பையன் சுலபமாகச் சொல்லி விட்டான்:
"அதுவரை நீ காத்திருக்க வேண்டும். அதன் இடையில் நான், உன்னை எப்போதாவதுப் பார்த்துக் கொள்கிறேன்... நீயும் நன்றாகப் படி...'
— இதைச் சொல்லிய அவனுக்கே நன்றாகத் தெரிந்திருக்க வேண்டும். ஒரு பெண் — அதுவும் கல்லூரியில் முதல் வருடம் படிப்பவள்.... இன்னும் உலக அனுபவம் இல்லாதவள், இவளிடம் போய், "நான் உன்னைக் காதலிக்கிறேன்... காத்திரு... நன்றாகப்படி' என்றால் அவள் படிப்பு சுழிதான் என்று!
படிப்பை கோட்டை விட்டு, "எப்போது அவன் வருவான். இந்த சனிக்கிழமை எங்கே சந்திக்கலாம். அவனுடன் சினிமாவுக்கு, ஓட்டலுக்குப் போனால் தான் என்ன... விடுமுறைக்கு ஊருக்குப் போகாமல் இருக்க, அப்பாவுக்கு என்ன சாக்கு சொல்லலாம்...'
— இப்படி மனம் அலை பாயும்.
யோசித்துப் பார் கண்ணம்மா... ஏதோ ஒரு மாநிலத்தில் இருந்து, தங்களது தங்கமானப் பெண்ணை, படிப்பிற்காக வேறு மாநிலத்துக்கு பெற்றோர் அனுப்பி வைத்தால் - அவள் இங்கே வந்து உட்கார்ந்து, "சீனியரா - சக மாணவனா - எவனைக் காதலிக்கலாம்' என்று யோசித்துக் கொண்டிருப்பது அறிந்தால், துடித்துப் போய் விட மாட்டார்களா?
அப்படி உனக்கு காதல், கல்யாணம் தேவை என்றால் - பாவம், உன் பெற்றோரிடம் சொல்லி, கல்லூரிச் செலவையாவது மிச்சப் படுத்தலாமே?
நான் இப்படிச் சொல்வதற்காக வருத்தப்படாதே!
சக மாணவன் மனசில் காதல் இருக்கிறதா என்று தேடாதே. அவனும் படித்து, உருப்பட வேண்டும்.
சீனியர், ஊரிலிருந்து திரும்பி வந்து கேட்டால், "சாரி இப்போது எனக்கு காதலிக்கும் வயசில்லை. என் பெற்றோர் என்னை அதற்காக இங்கே படிக்க அனுப்பவும் இல்லை... முதலில் படிப்பு; பிறகுதான் மற்றவை எல்லாம்' — என்று, "பளிச்'செனக் கூறு! புரிகிறதா? இந்த பரிட்சையில் எந்த பாடத்தில் மதிப்பெண் குறைவு... அதை எப்படி சரி செய்யலாம் என்று பார்.
இப்படிக்கு, அன்புடன்
சகுந்தலா கோபிநாத்.

Labels:



comment closed

Blogger இயக்குவது.